தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ - வைரலான வீடியோ

By

Published : Nov 16, 2021, 10:49 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுக்கு அடங்கல் சீட்டு வழங்க விவசாயிகளிடம் விஏஓ லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கடந்த 9ஆம் தேதி அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி உளுந்து பயிருக்கு காப்பீடு செய்வதற்கு நேற்று (நவ.16) கடைசி நாளாகும்.

இதனால், மானாவாரி விவசாய பகுதியான விளாத்திகுளம், அதன் சுற்று வட்டார கிராமங்களில் அடங்கல் சீட்டுப் பெற கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு அடங்கல் சீட்டு வழங்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது.

விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகளுக்கு அடங்கல் சீட்டு வழங்குவதற்கு அலுவலர் ஒருவர் லஞ்சம் கேட்ட வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியது. இது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் கேள்விகளை கேட்க அலுவலர் பதில் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளது.

அந்த வீடியோவின் படி விவசாயி ஒருவர் “நான் நான்கு நாள்களாக இங்கு வருகிறேன். ஆனால் புளியங்குளம் ஆள்களுக்கு அடங்கல் போட்டு கொடுக்கின்றனர் எனது பெயரை பட்டியலில் எழுதி வைத்துள்ளனர்‌‌. வராத ஆள்களுக்கு அடங்கி சீட்டுகள் கொடுக்கின்றனர். இப்படி வழங்குவதற்கு 100 ரூபாயை அலுவலர்கள் வசூலிக்கின்றனர்” எனக் கூறுகிறார்.

இதைத்தொடர்ந்து வீடியோ எடுத்தவர் கிராம நிர்வாக அலுவலரை நோக்கி அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக உங்கள் மீது புகார்கள் வருகிறது. அது தொடர்பாக வீடியோ எடுத்துள்ளேன். இவ்வாறு அடங்கல் வழங்குவதற்கு பணம் வசூல் செய்ய சொல்லி உள்ளனரா என கேள்வி கேட்டதற்கு பதிலளித்த விஏஓ “நானாக கேட்கவில்லை அவர்களாக கொடுக்கின்றனர் நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இதில் உனக்கு என்ன பிரச்சினை” எனக் கூறுகிறார்.

விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ

இதைத்தொடர்ந்து வீடியோ எடுத்தவர் அவர்களாகவே பணம் கொடுக்கின்றனரா? எனக் கேள்வி கேட்டதற்கு ஆமாம் என விஏஓ பதில் கூறுகிறார். லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோவில் உள்ள அலுவலர் குறித்து விசாரித்ததில் அவர் விளாத்திக்குளம் அருகேவுள்ள மார்த்தாண்டம் பட்டி கிராம நிர்வாக அலுவலர் வினோத் என்பதும் அவர், புளியங்குளம் கிராமத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது இந்த விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளோம் எனப் பதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:Bribe: விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் - 2 காவல் ஆய்வாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

ABOUT THE AUTHOR

...view details