சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் நுழைவு வாயிலாக திகழும் பெருங்களத்தூர் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறித்த அச்சம்தான் முதலில் நினைவுக்கு வரும். இதற்கு காரணம், பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் என்பது அந்த பகுதியில் நிரந்தரமாக இருக்கும் நிலை எனலாம். இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் என்ன? இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மற்றொரு காரணம், பெருங்களத்தூர் ரயில் நிலையம் கிராஸிங் பகுதியில் மேம்பாலங்கள் இல்லை. அதனால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. இதனால் அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை கட்டுபடுத்தும் வகையில், கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலமும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
திட்டப் பணிகள் என்னாயிற்று? அதன் பின்னர் கரோனா மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளுக்கு தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது.
அதன் பின்னர், பெருங்களத்தூரில் இருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராசிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் பணிகள் தொடங்குவதற்கு காலதாமதம் ஆகியது. குறிப்பாக, பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி பாலம் கட்டுவதற்கு காலதாமதம் ஆகியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
எப்போது தொடங்கும் பாலம் கட்டும் பணி? இதையடுத்து, கடை உரிமையாளர்களுக்கு நிதி கொடுத்து அந்த இடத்தை வாங்கிய பின், சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதேபோல், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை வழியாகச் செல்லும் மேம்பாலம் பணிகள் 50 சதவீதம் மட்டுமே நடைபெற்று, நான்கு ஆண்டு காலமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துதல், மின்வாரிய அலுவலகத்தை மாற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணி கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, வனத்துறையிடம் அனுமதி கேட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காத்திருப்பதாகவும், காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மின்வாரிய அலுவலகத்திற்கு 12 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் மாற்று இடத்தில் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற இருப்பதாகவும், அதன் பின்னர் சாலைப் பணிகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதியில் மக்கள்: பெருங்களத்தூர் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்பாலம் பணிகள் முழுமை அடையாததால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பெருங்களத்தூர், காமராஜர் சாலைக்குச் செல்லும் வாகன ஓட்டிகளும், ரயில்வே சீனிவாசா நகருக்குச் செல்லும் வாகன ஓட்டிகளும், மூன்று கிலோ மீட்டர் சுற்றி வந்து செல்வதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக சமூக ஆர்வலரும், குடியிருப்பு நல சங்க தலைவருமான மகேந்திர பூபதி நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்த மகேந்திர பூபதி, “பெருங்களத்தூர் பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2020ம் ஆண்டு முதல் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது வரையும் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்ல மேம்பாலமும், பெருங்களத்தூரில் இருந்து காமராஜர் சாலை வழியாகச் செல்லும் மேம்பாலமும், இன்னமும் கட்டி முடிக்கப்படாமல் அரைகுறை வேலை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேம்பாலத்தின் மீது ரவுண்டனா அமைக்கும் பணியும் இன்னும் முடிவு பெறாமல் உள்ளது.
இந்த நான்கு மேம்பாலப் பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்காமல், அதிகாரிகள் நீண்ட காலமாக இழுத்தடித்து வருகின்றனர். மேலும், காமராஜர் சாலை வழியாக கட்டப்படும் மேம்பாலம் பணிக்கு இடையூறாக மின்வாரிய அலுவலகம் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான இடம் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இந்தப் பணிகள் முடிந்து மேம்பாலம் கட்டி முடிக்க இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும் என தெரிகிறது.
அரசை மக்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள்: சொல்லப் போனால் பெருங்களத்தூர் பகுதி மிகப்பெரிய அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல் பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வோர் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தும்போது போக்குவரத்து நெரிசலில் அவதிக்குள்ளாகின்றனர்.
தற்போதும் கூட பெருங்களத்தூரில் இருந்து கூடுவாஞ்சேரி கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. நாங்கள் பெருங்களத்தூர் மேம்பாலப் பணிகள் குறித்து ஆர்டிஐ மூலம் கேட்டபோது, கடந்த 2022ஆம் ஆண்டு இந்த பணிகள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால், நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் முடிக்கப்படவில்லை, மக்கள் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செய்து முடித்து உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்படி விரைவில் முடிக்கவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று கிலோமீட்டர் சுற்றி செல்லும்போது தமிழ்நாடு அரசையும், அதிகாரிகளையும், பொதுமக்கள் விமர்சித்துக் கொண்டே தான் இருப்பார்கள்” எனக் கூறினார்.
போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு: இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் இந்த பாலங்களின் கட்டுமான பணி குறித்து கேட்டபோது, “தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதன் பிறகு பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கொண்டு வரப்படும்.
10 நாட்களில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: தற்போது மேம்பாலத்தின் மீது தார் சாலைகள் போடும் பணிகள், மேம்பாலத்தின் இருபுறமும் உயர் மின்விளக்குகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தின் சுற்றுச்சுவரில் வண்ணங்கள் அடிக்கும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 10 நாட்களில் சாலை பாதுகாப்பு பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறக்கப்படும். அதன் பிறகு பெருங்களத்தூர் பகுதியில் நெடுங்காலமாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இருந்து காமராஜர் சாலை வழியாகச் செல்லும் மேம்பாலம் பணிகள் குறித்து பேசிய அவர், “மேம்பாலம் செல்லும் வழியில் வனத்துறைக்குச் சொந்தமான இடமாக இருப்பதால், அதனை பெறுவதற்கு பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது வனத்துறைக்கு கடிதம் எழுதி அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
எனவே, வனத்துறை ஒப்புதல் அளித்தவுடன் அந்த இடத்தை அவர்களிடம் இருந்து நிதி கொடுத்து வாங்கிவிட்டு, அந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேலும், வழியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்காக 12 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மின்வாரிய அதிகாரிகளும் வேறு இடத்தை தேர்வு செய்து மின்வாரிய அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இன்னும் 6 முதல் 8 மாதத்திற்குள் பெருங்களத்தூர் காமராஜர் சாலை மேம்பாலப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் இன்னும் பத்து நாட்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும். அதன் பிறகு பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது” எனக் கூறினார்.
நிம்மதியில் பொதுமக்கள்: மேலும், சென்னை நகருக்கு வெளியே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டியிருந்தாலும், சென்னை நகருக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் பெருங்களத்தூர் தான் பிரதான நுழைவு வாயிலாக உள்ளது. இதனால் அப்பகுதியில் எப்போதுமே பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அங்கு அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தினால் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வரும் எனவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பயிர்களை தாக்கும் மக்காச்சோள படைப்புழு.. பாதிப்பை தடுப்பது எப்படி? - வேளாண் வல்லுநர் கூறும் ஆலோசனைகள்!