சென்னை: 'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அந்த பாம்பை நம்மில் எத்தனை பேர் யானை, சிங்கம் போன்ற வனவிலங்குகள் போல் ரசித்து, நல்ல விதமான ஒப்பீட்டில் நியாபகம் வைத்துள்ளோம்? இந்த பாம்புகளின் விஷம் மற்றும் பாம்புகளின் சிறப்பு குணங்கள் குறித்து உலக பாம்புகள் தினமான இன்று இந்த சிறப்பு கட்டுரையில் பார்க்கலாம்.
உணவுச் சங்கிலியை பாதுகாக்கும் பாம்புகள்: இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வாழ்வது இயற்கையின் அமைப்பாக உள்ளது. இதில் உயிர்ச் சமநிலையை பேணுவதில் பாம்புகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதாவது குறிப்பாக விவசாய நிலங்களில் 20 சதவீத உணவை எலிகள் சாப்பிட்டு வீணாக்குகின்றன. இந்நிலையில் பாம்புகள் இந்த எலிகளை கொன்று தின்பதால், வயல்வெளிகளில் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மேலும், இந்த பாம்புகள் பல வகையான நோய்களுக்கு விஷமுறிவு மருந்துகளையும் அளிக்கின்றன. இவ்வாறு உணவு சங்கிலியின் நடுநிலை வகிக்கும் இந்த பாம்புகள் எலிகளை உண்பதும், இந்த பாம்புகளை கழுகுகள் உண்பதும் உணவுச் சங்கிலி அமைப்பின் ஒரு அங்கமாக உள்ளது.
மனிதனின் உயிரை உறிஞ்சும் பாம்புகள்: பாம்புகள் நன்மை பயப்பதாக ஒருபுறம் இருந்தாலும், பாம்புக்கடியோல் ஏற்படும் மரணங்களும் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளில் பாம்புகள் மனிதர்களை கடித்து அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அடிக்கடி நடந்துவருகிறது. பாம்புகளில் 3,500 வகைகள் இருப்பதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதில் அனைத்து பாம்பும் மனிதனை, பாதிப்புக்குள்ளாக்குகிறதா என்றால் இல்லை. அவற்றில் 600 வகை பாம்புகள் தான் நஞ்சுத்தன்மையை கொண்டவை, அதிலும், 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதர்களை கொல்லும் அளவுக்கு அதிக விஷம் கொண்டவையாக உள்ளன.
நகர்ப்புறத்திற்கு குடிபெயரும் பாம்புகள்: இந்தியாவை பொறுத்தவரை, மனிதர்கள் வாழும் பகுதியை சார்ந்து, வாழ்கின்ற பாம்புகளில், நான்கு வகை பாம்புகள் மட்டுமே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டது என்கிறார் வனக் கால்நடை மருத்துவர் அசோகன். இதுகுறித்து அவர் கூறுகையில், "பாம்புகள் பெரும்பாலும் மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே முயற்சி செய்யும். ஆனால் மனிதனின் அசைவை அறிந்து தற்காத்துக்கொள்ளவே அது சீறி, கடிக்க முற்படுகிறது. தற்போது கிராமப்புறங்கள் நகர்ப்புறங்களாக மாறிவரும் சூழலில் பாம்புகளுக்கு தேவையான உணவு கிராமப் பகுதிகளில் கிடைக்காததால் அவை நகர்ப்புறத்தை நோக்கி நகர்கின்றன" என்றார்.
பாம்புகள் Vs மனிதர்கள் தொடரும் மோதல்: தொடர்ந்து பேசிய மருத்துவர் அசோகன், "நகர்ப்புறத்தை நோக்கி படையெடுக்கும் பாம்புகள் பல்வேறு வகையான புதிய நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அசைவ பிராணியாக இருந்த பாம்புகள் தற்போது உணவுப் பற்றாக்குறையால் சைவத்திற்கு மாறி வருகின்றன. அதாவது தற்போது பாம்புகள் துணி, கண்ணாடி பாட்டில் ஆகியவற்றை சாப்பிட துவங்கியுள்ளன. அதுமட்டுமின்றி சாலை விபத்தில் சிக்கியும், பருவநிலை மாற்றத்தாலும், குறிப்பாக கோடைக் காலத்தில் பூமிக்குள் இருக்க முடியாமல் வெளியில் மனிதர்கள் இருக்கும் நிலப்பரப்புக்கு வரும் போது பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் மோதல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் பாம்பு கடித்து உயிரிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது" என அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறினார்.
பழிவாங்க வருகிறதா பாம்புகள்?: மேலும், பொதுவாக பாம்புகள் தட்பவெப்ப சூழ்நிலையை வைத்து உணவு தேடிக் கொள்கிறது. இதனை வைத்து குளிர் காலங்களில் வெப்பப் பகுதியை நோக்கி செல்கின்றன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் பாம்புகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே தான் பிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டாலும், மீண்டும் அதே பகுதிக்கு அந்த பாம்பு வந்து விடும் ஆற்றல் பெற்றுள்ளது. இதனால் தான் பாம்புகள் வந்த இடத்திற்கே மீண்டும் வரும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இதை மக்கள் பாம்புகள் பழி வாங்க வருவதாக புரிந்து கொள்கின்றனர்" என்றார்.
அழிந்து வரும் பாம்பு இனம்: இதற்கிடையே உலகளவில் பாம்புகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மலைப்பாம்பு ஒன்று ஆராய்ச்சி செய்யப்பட்டது. அந்த பாம்பின் மீது ரேடியோ காலர் பொருத்தப்பட்டு ஒரு ஆண்டு முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்ற நிலையில், பாம்புகளுக்கு ஏற்படும் புதுவகை நோய்களுக்கான காரணிகள் கண்காணிக்கப்பட்டன. இதன் ஆராய்ச்சி முடிவுகளின் படி காலநிலை மாற்றம் காரணமாகவும், உணவுமுறை மாற்றங்களாலும், பாம்புகளுக்கு கேன்சர் நோய் உருவாக செய்வதாகவும், இதனால் பல பாம்புகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த பாம்புகள் உடலில் ஏற்பட்ட கட்டிகளை அகற்றி சோதனை செய்து, சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதயம் பாதிக்கப்பட்ட பாம்புகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருந்த 300 வகையான பாம்புகளில் 14 வகையான பாம்பு அழிந்துவிட்டன. இந்த பாம்புகளின் இனப்பெருக்க வயது 3 முதல் 4 ஆக இருப்பதால் அவற்றின் வாழ்நாள் காலமே அவற்றின் எண்ணிகையை நிர்ணயிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பாம்பை பார்த்தவுடன் நாம் செய்ய வேண்டியது என்ன?: தற்போதைய சூழலில் பாம்புகளையும் காத்து, பாம்புகளிடம் இருந்து மனிதனை காப்பாற்றுவது அவசியம். அதற்கு மனிதர்களிடம் பாம்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார், பாம்பு பிடி வீரர் அமீன், இது குறித்து அவர் கூறுகையில், "நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய 4 வகையான பாம்புகள் மட்டுமே விஷம் உடையவை. எனவே அவற்றை கவனமாக அணுக வேண்டும். ஒருவேளை குடியிருப்புகுள் பாம்புகள் வந்தால் உடனே கட்டை வைத்து அதை அடிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும். மாற்றாக வனத்துறை, தீயணைப்பு துறை அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தகவல் தெரிவித்த சிறிது நேரத்தில் அந்த பாம்பை மீட்டு அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விடப்படுகின்றன. மேலும் ஒரு ஆண்டில் சுமார் 10,000 பாம்புகள் வரை குடியிருப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதில் பாம்புகள் கடித்து விட்டால், கடித்த இடத்தில் கத்தியால் கீறுவது, கயிறு கொண்டு கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் டெங்கு பரவல் எதிரொலி; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!