தமிழ்நாடு

tamil nadu

'மீண்டும் எங்கள் ஆட்சியே!' - டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா

By

Published : Jan 28, 2020, 2:57 PM IST

டெல்லி: சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ராவுடன் அமித் அக்னிஹோத்ரி நடத்திய நேர்காணலை தற்போது பார்ப்போம்.

Subash
Subash

கேள்வி: டெல்லி சட்டப்பேரவைக்கு 2015இல் தேர்தல் நடைபெற்றபோது அதில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. தற்போது 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கான வெற்றிவாய்ப்பு எவ்வாறு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

  • பதில்: காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் இது என்பது நிரூபிக்கப்படும்.

கேள்வி: எதன் அடிப்படையில் இவ்வாறு சொல்கிறீர்கள்?

  • பதில்: ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. ஜன் லோக்பால் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள். அவரது அந்தப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் வலுவாக இருந்தபோதுதான் 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்று ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த ஆறரை ஆண்டுகளில் என்ன நடந்தது? ஜன் லோக்பால் விஷயத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்துள்ளார்? அவர் எதுவுமே செய்யவில்லை. மாறாக, மத்திய அரசும் டெல்லியின் துணைநிலை ஆளுநரும் தன்னை வேலை செய்யவிடவில்லை என்று குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்.

கேள்வி: இந்தத் தேர்தலில் உங்கள் முக்கிய எதிர்ப்பாளர் யார்? மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாவா அல்லது டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியா?

  • பதில்: இருவருமே எங்கள் எதிர்ப்பாளர்கள்தான். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் உண்மையான சகோதரரைப் போலத்தான் தற்போது நடந்துகொள்கிறார்.

கேள்வி: இந்தக் குற்றச்சாட்டை எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்?

  • பதில்: கடந்தாண்டு ஹரியானாவில் பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி அரசு அமைக்கப்பட்டதற்கு கெஜ்ரிவால்தான் காரணம். ஏனெனில் ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா முன்பு கெஜ்ரிவாலோடு இருந்தவர். துஷ்யந்தின் தந்தை அஜய் சவுதலாவை தில்லி அரசு எந்த விதிகளையும் பின்பற்றாமல் திகார் சிறையிலிருந்து நள்ளிரவில் விடுவித்தது. விடுவிப்பதற்கான கோப்புகளை மாநில உள் துறைதான் ஆய்வுசெய்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று சிறைச்சாலை விதிகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்று தில்லி உள் துறை அமைச்சர் சொல்வாரானால், அவர்கள் ஆட்சியில் இருக்கத் தகுதியில்லை என்றாகிவிடும்.

கேள்வி: டெல்லியின் முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் தலைவரான மறைந்த ஷீலா தீட்சித்தின் சாதனைகளை முன்வைத்தே கட்சி பரப்புரை செய்கிறது. டெல்லி மக்கள் ஏன் உங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான முக்கிய மூன்று காரணங்களைப் பட்டியலிட முடியுமா?

  • பதில்: மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல் துறையினர் அவர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களை ஒரு மாதிரியும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை வேறொரு மாதிரியாகவும் அவர்கள் நடத்தியதைப் பார்க்க முடிந்தது. எவ்வித அனுமதியும் இன்றி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கடுமையாகத் தாக்கிய காவல் துறையினர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் வன்முறை நிகழ்ந்தபோதும் உள்ளே நுழையாமல் வாயில் முன்பாகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.மக்களைப் பாதுகாக்கத்தான் ஒருவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், இந்த நிகழ்வுகளின்போது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்துகொண்டிருந்தார்? மாணவர்களைக் காப்பாற்ற முடியாத ஒரு அரசுக்கு அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை. சம்பவம் நடந்தபோது கெஜ்ரிவால் அங்கு இருந்திருக்க வேண்டும்.மாணவர்களின் நலன்களுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்.
  • அதோடு, டெல்லியின் மாசுபாட்டைக் குறைக்க முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்? சுவாச நோய்களால் கடந்தாண்டு டெல்லியில் ஒரு நாளைக்கு 58 பேர் உயிரிழந்தனர்.
  • அதேபோல், வெங்காய விலை உயர்வையும் குறிப்பிட்டாக வேண்டும். இவை எல்லாம் மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்னைகள். மக்களுக்கு சுத்தமான குடிநீரையும் காற்றையும் கொடுக்க முடியாத, உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு அரசுக்கு ஆட்சியில் இருக்க அருகதை இல்லை. இதையெல்லாம் முன்வைத்துத்தான் நாங்கள் தேர்தலை எதிர்கொள்கிறோம். கெஜ்ரிவால் எதுவும் செய்யவில்லை என்பதை மட்டும் நாங்கள் சொல்லவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்கிறோம்.

கேள்வி: டெல்லி குடியிருப்புவாசிகளுக்கு மலிவான விலையில் மின்சாரத்தை தங்கள் அரசு வழங்கிவருவதாக ஆம் ஆத்மி கூறுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • பதில்: மலிவான விலையில் மின்சாரம் அளிப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை. 200 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் கெஜ்ரிவால். ஆனால், நாங்கள் 600 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிப்போம் என்று அறிவித்துள்ளோம். சிறிய கடை வைத்திருப்பவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வரை கமர்ஷியல் மின்கட்டணம் இருக்காது என்றும் நாங்கள் உறுதியளித்துள்ளோம். ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து விவசாயிகள் நீர் இறைப்பதற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளோம். இவை எல்லாம் டெல்லிக்கு தேவையானவை. நாங்கள் தவறான வாக்குறுதிகளை வழங்குவதில்லை. நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதைச் செய்கிறோம். முன்பும் நாங்கள் செய்துள்ளோம்.
  • டெல்லியில் ஒரு காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்சாரத் தட்டுப்பாடும் கடுமையாக இருந்ததால், இங்கு வருவதற்கே மக்கள் அச்சப்பட்டார்கள். ஆனால், அதனை நாங்கள் மாற்றிக் காட்டினோம். டெல்லியில் உள்ள மேம்பாலங்கள் யாரால் கட்டப்பட்டன? மெட்ரோ ரயில் யாரால் கொண்டுவரப்பட்டது? மருத்துவமனைகள், பள்ளிகள், ஐந்து பல்கலைக்கழகங்கள் என இவற்றை எல்லாம் உருவாக்கியவர்கள் யார்? இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது உருவாக்கப்பட்டவை. உலகின் சிறந்த தலைநகராக டெல்லியை உருவாக்கியவர்கள் நாங்கள். மக்கள் எங்களை ஆசீர்வதித்தால், டெல்லியை மீண்டும் சிறந்த பெருநகரமாக மாற்றுவோம்.

கேள்வி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவருகிறது. சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை கெஜ்ரிவால் தவிர்ப்பதாக நீங்கள் குற்றஞ்சாட்டுகிறீர்கள். டெல்லி தேர்தலிலும் இது ஒரு பிரச்னையாக இருக்குமா?

  • பதில்: குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு தேசிய பிரச்னை. நிச்சயமாக டெல்லியிலும் அதன் தாக்கம் இருக்கும். சி.ஏ.ஏ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியது அல்ல; இது அனைத்து குடிமக்களுக்கும் கவலையை அளித்துள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. ஆனால், டெல்லியில் எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சமீபத்தில்தான் டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்புவரை மாணவர்கள் வீதிகளில் போராடியபோதும், தாக்கப்பட்டபோதும் டெல்லி முதலமைச்சர் எவ்வித அனுதாபத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், போராடும் மாணவர்களோடு இணைந்து இரவைக் கழித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இந்த மாணவர்கள் கெஜ்ரிவாலுக்கு நிச்சயம் பாடம் கற்பிப்பார்கள்.

கேள்வி: மத்திய அரசு ஏன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது என்று நினைக்கிறீர்கள்?

  • பதில்: பாஜக அரசு அதன் பொருளாதாரத் தோல்விகளிலிருந்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் திணறிவருவதிலிருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சி.ஏ.ஏ.வை நாங்கள் எதிர்த்தோம். அமைதியான போராட்டங்களுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவளித்துவருகிறோம். எந்தவொரு போராட்டத்திலும் வன்முறைக்கு இடமில்லை.
    டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா பேட்டி
  • மற்றபடி, இது தானாகவே தோற்கடிக்கப்படும். டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் பெண்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன். தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே அவர்கள் வெளியே வந்துள்ளார்கள். இத்தகைய போராட்ட குணம் நமது பெண்களுக்குத் தேவை. அவர்கள் முன் நான் தலைவணங்குகிறேன்.

ABOUT THE AUTHOR

...view details