மும்பை: 97 புள்ளி 87 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும், 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
2023ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியின் படி 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும் அதேநேரம் கடந்த ஜூன் 28ஆம் தேதியின் படி 7 ஆயிரத்து 581 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படாமல் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுவரை ஏறத்தாழ 97 புள்ளி 87 சதவீத நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.
நாடு முழுவதும் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, போபால், புவனேஷ்வர், சண்டிகர், கவுகாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, மும்பை, லக்னோ, நாக்பூர், டெல்லி உள்ளிட்ட 19 ஆர்பிஐ கிளைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.
மேலும், இந்திய அஞ்சல் மூலம் பொது மக்கள் ரிசர்வ் வங்கிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அனுப்பி வைக்கலாம் எனக் கூறப்பட்டு இருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் அப்போது எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "நீட் தேர்வு பணக்கார மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட வணிக தேர்வு"- ராகுல் காந்தி! - Rahul Gandhi on Neet issue