சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக, 2025-2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (பிப்.16) சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “பட்ஜெட்டின் முக்கியமான நோக்கம் ஏழை எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தாய்மார்கள். இந்த நான்கு வர்க்கத்தையும் மேம்படுத்தினால் தான், 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்ற தொலைநோக்கு சிந்தனைபடியே, இந்த பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“எளிய மக்களுக்கான பட்ஜெட்” :
பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் அனைவருக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான வரிவிலக்கைப் பிரதமர் அளித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் தொழில்துறை, விவசாயத்துறை, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் அதிகளவில் உள்ளது.
“ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களுக்கு உதவும் அரசு” :
இந்தியாவில் 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இருந்தன. பிரதமரின் ஊக்கத்தின் காரணமாக தற்போது 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. உலகிலேயே அதிகமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகள் பட்டியலில், 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அறிவியல்ரீதியான மேம்பாட்டை அடைய 50 ஆயிரம் பள்ளிகளில் ’அடல் லேப்பை’ உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய சென்னை மேற்கு மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, நமது மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்த விளக்க பொதுக்கூட்டத்தில்… pic.twitter.com/pVh5LZkakw
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 16, 2025
மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம், வீட்டு வரி ஆகியவற்றை அதிகரித்து திமுக கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சுமையை மக்கள் தலைகளில் கட்டிவிட்டனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்தது திமுகவைச் சேர்ந்த நபர் என்று கண்டறிந்தது பாஜக தான். பட்டியலின மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடக்கின்றன. திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவியையே வெட்டிக் கொலை செய்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளி:
திமுகவினருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கியது திமுக அரசு. தமிழ்நாட்டின் மிக முக்கியமான கனிமங்களைத் தமிழ்நாடு அரசு கொள்ளையடித்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இளைஞர்கள் திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள். சர்வதேச அளவில் தமிழர்கள் புகழ் பெற வேண்டும் என்பது தான் பிரதமரின் நோக்கம். அதற்குத்தான் பல தரப்பட்ட ஆலோசனைகள் நடத்தி, புதியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி அளவிலேயே தாய் மொழியான தமிழ்மொழிக்கும், முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மும்மொழிக் கொள்கை உள்ளது.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான்" - எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
மும்மொழி கொள்கை விவகாரம்:
ஆங்கிலம் மட்டும் தான் கற்றுக் கொடுக்க வேண்டுமா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் எங்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது? உலகம் முழுவதும் பிரதமர் மோடி தொடர்ந்து தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். பிஎம்ஸ்ரீ உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம். ஆனால், நிதி மட்டும் வேண்டும் என கூறுவது எப்படி? சரியாகும். திமுகவினர் அரசியலுக்காக போலி வேடமிடுகின்றனர். திமுகவின் அரசியலுக்காக மாணவர்களைப் பலியாக்கக் கூடாது. மேலும், விகடன் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.