டெல்லி: 18வது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, மாணவர்களுடனான கலந்துரையாடலை குறிப்பிட்டு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் வணீக அடிப்படையிலான தேர்வு என்றார்.
மேலும் நீட் தேர்வு பணக்கார மாணவர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஏழை மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கானது அல்ல என்றும் கூறினார். தேர்வு வினாத் தாள் கசிவு குறித்து பேசிய ராகுல் காந்தி, நாட்டில் உள்ள அனைவரும் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
நீட் தேர்வுக்காக மாணவர்கள் ஆண்டுக் கணக்கில் தங்களது நேரத்தை செலவழித்து தயாராகி வருவதாகவும், அவர்களது குடும்பத்தினர் நிதி ரீதியிலும், உணர்வுப்பூர்வமாகவும் தங்களது ஆதரவை அளித்து வருவதாகவும் கூறினார். ஆனால், உண்மை என்னவென்றால் நீட் தேர்வு மீது மாணவர்கள் நம்பிக்கையற்று நிற்கிறார்கள், மாறாக மருத்துவ நுழைவுத் தேர்வு பணக்கார மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது, தகுதி உள்ளவர்களுக்கானது அல்ல என்று மாணவர்கள் நம்புவதகாவும் ராகுல் காந்தி கூறினார்.
பல தரப்பட்ட மாணவர்களை சந்தித்த போது, நீட் தேர்வு முற்றிலும் பணக்கார மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகவும் ஏழை மாணவர்களுக்கானது அல்ல என்றும் தாங்கள் மாதக் கணக்கில் நீட் தேர்வுக்கு பயின்று வருவதாகவும் தெரிவித்ததாக ராகுல் காந்தி கூறினார். நாட்டில் இளைஞர்கள், விவசாயிகள், பெண், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயத்தில் இருப்பதாகவும், நாடு முழுவதும் மட்டுமின்றி பாஜக கட்சியினரும் கூட பயத்தில் இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.
இதுதான் உண்மையான சூழல் மற்றும் ஏன் அனைவரும் அது குறித்து குரல் எழுப்பாமல் உள்ளனர் என மக்களவையில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து விவாதிக்க ஒருநாள் வேண்டும் என்றும், மிக முக்கியமான பிரச்சினை என்பதால் அது குறித்து ஒருநாள் முழுவதும் விவாதிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
நீட் தேர்வால் ஏறத்தாழ 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் மட்டும் 70 முறை வினாத் தாள் கசிவு சம்பவங்கள் நடந்து உள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பேசும் போது மைக் ஆப் செய்யப்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சைக் கேட்காமல் மைக்கை சபாநாயகர் ஓம் பிர்லா ஆப் செய்வதாகவும் கூறி நாடாளுமன்றத்தின் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல... நாடாளுமன்றத்தை உலுக்கிய ராகுல் காந்தி! - Rahul Gandhi Speech