வள்ளி கல்யாணம்; சுவாமிமலையில் யானை விரட்டல் நிகழ்வு கோலாகலம்! - Yaanai Virattal
Published : Mar 28, 2024, 5:00 PM IST
|Updated : Mar 29, 2024, 4:07 PM IST
தஞ்சாவூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு, இன்று (மார்ச் 28) காலை வள்ளி கல்யாணம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, அரசலாற்றங்கரையில் யானை விரட்டல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகசுவாமியை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழாவின் போது, வள்ளி கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்வு, இன்று அதிகாலை சுவாமிமலை அரசலாற்றில் நடைபெற்றது. அப்பொது, தினைபுனம் காத்த வள்ளியை விநாயகப்பெருமான் யானை உருவத்தில் வந்து விரட்டும் காட்சியும், பின்னர் முருகப்பெருமான் சுய ரூபத்தில் காட்சி அளித்தலும் நிகழ்த்தி காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான முருக பக்தர்கள் கலந்து கொண்டு யானை விரட்டல் நிகழ்வைக் கண்டு, பின் முருகனை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.