கொடைக்கானல் நகர் பகுதியில் உலா வரும் காட்டெருமை கூட்டம்!
Published : Feb 29, 2024, 7:24 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள், அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைகளில் உலா வருவது வழக்கம்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒன்றான ஏரி சாலை அருகே, 20க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் ஒரே நேரத்தில் சாலையில் சுற்றியுள்ளது. பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிகளுக்குள் புகுந்த காட்டெருமை கூட்டம், ஒன்றுக்கொன்று மோதி சண்டையிட்டுக் கொண்டது. இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “சுற்றுலாவிற்கு பெயர் போன கொடைக்கானல் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, இங்குள்ள குடியிருப்பு வாசிகளும் அச்சமடைகின்றனர்.
இதன் காரணமாக, வன விலங்குகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து கொடைக்கானல் சுற்றுலாப் பகுதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும்” என கோரிகை விடுத்தனர்.