சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டி: விறுவிறுப்பான ஆட்ட களம்! - VELLORE WHEELCHAIR BASKETBALL
Published : Feb 16, 2025, 9:02 AM IST
வேலூர்: வேலூர் மாவட்டம் பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மறுவாழ்வு மையத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில், முதுகுத் தண்டுவடத்தில் காயம் உள்ள நபர்களுக்கான மேரி வர்கீஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிஹாபிலிடேஷன் (சிஎம்சி) சார்பில் சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியான ’ரீஹாப் மேளா 2025’ என்ற பெயரில் நேற்று (பிப்.15) நடைபெற்றது.
இதில், திரளான மாற்றுத்திறன் உடைய நபர்கள் பங்கேற்றனர். இப்போட்டியினை கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில், ரீஹாப் அணியும் - எம்.விடி அணியும் ஆர்வமுடன் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் எம்.விடி அணி 14 புள்ளிகளும், ரீஹாப் அணி 16 புள்ளிகளும் பெற்றது. அதன் மூலம் ரீஹாப் அணி அபார வெற்றி பெற்றது. இந்த சக்கர நாற்காலி போட்டிகளில் தேசிய அளவில் மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி வீரர்களும் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி இப்போட்டியினை பார்வையிடத் திரளான மருத்துவர்களும், மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளும் வருகை புரிந்திருந்தனர்.