பழனி தைப்பூசம்; களைகட்டிய தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்வு!
Published : Feb 3, 2024, 6:27 PM IST
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்றுது. தைப்பூசத் திருவிழாவின்போது அருள்மிகு முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில், குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளிக்கும் - முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதையடுத்து, வள்ளியின் பிறந்த வீடான குறவர் இன மக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இன மக்கள் அனைவரும் இணைந்து, பழனி முருகனுக்கு தாய் வீட்டு சீதனங்கள் கொண்டு வரப்பட்டு, பழனி பேருந்து நிலையம் முதல் தேவர் சிலை, சன்னதி வீதி, அடிவாரம் வழியாக மலைக்கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். இதில் இளம் பெண்களுக்கு வள்ளி வேடம் இட்டும், சிறுவர்களுக்கு வேடர் வேடமிட்டும் பெண்கள் தேன், திணைமாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு ஆகியவற்றை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இதில் சிலர் அலகு குத்தி, அவர்களது நேர்த்திக்கடனையும் செலுத்தினர். முருகனுக்கும், வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்ட சீர்வரிசைப் பொருட்களை பழனி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இன மக்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.