வாலாஜாபேட்டை திரெளபதி அம்மன் கோயில் விவகாரம்: கிராமமக்கள் கலெக்டரிடம் மனு! - மாவட்ட ஆட்சியர் வளர்மதி
Published : Feb 20, 2024, 8:33 AM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் திரெளபதி அம்மன் என்கின்ற பொது கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து தரப்பைச் சேர்ந்த பொதுமக்களும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும், இக்கோயிலில் உள்ள அம்மனிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு தரப்பினைச் சேர்ந்தவர்கள் கோயிலின் உள்ளே புதிய சிலைகளை வைத்து கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதோடு, கோயில் அவர்களுக்கே சொந்தமானது என்பது போன்று சித்தரிப்பதாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டி இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனால், கோயிலில் வைக்கப்பட்ட சிலையை உடனடியாக அகற்றி விட்டு, அக்கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாகவெளி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பு பொதுமக்கள் வாயில் கறுப்பு துணி கட்டியபடி, நேற்று (பிப்.20) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் வளர்மதி விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.