புதுக்கோட்டை அருகே 96வது ஆண்டு விழா காணும் பள்ளி; கல்வி சீர்வரிசை அளித்து மகிழ்ந்த ஊர்மக்கள் - pudukkottai school
Published : Mar 16, 2024, 11:17 AM IST
புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தில் 1928ஆம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி (Veeradipatti A.D.W. Primary School) கட்டப்பட்டது. இந்த பள்ளி கட்டப்பட்டு இந்த ஆண்டுடன் 96 ஆண்டுகள் ஆன நிலையில், நேற்று (மார்ச்) 96வது ஆண்டு விழா நேற்று (மார்ச் 15) கொண்டாடப்பட்டது. இதற்கான விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இதனிடையே, கலை நிகழ்ச்சிகளுடன் இப்பள்ளியின் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ராணுவம், காவல்துறை, ஆசிரியர் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆண்டு விழாவையொட்டி, இப்பள்ளியில் பயின்று உயர் பொறுப்புகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, பள்ளிக்கு தேவையான பீரோ, மேஜை, நாற்காலி, கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆட்டோவில் சீர்வரிசையாக பள்ளி வளாகத்திற்கு கொண்டு வந்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று பள்ளிக்கு தேவையான சீர்வரிசை பொருட்களை வழங்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.