அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய 5 பேர்..திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்! - government bus driver attack
Published : Aug 23, 2024, 4:41 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல், வேடசந்தூரிலிருந்து பழனியை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று சென்றுள்ளது. இதில் ஓட்டுநராக கார்த்திகேயன் (46) மற்றும் நடத்துநராக செபஸ்தியார் (45) இருந்துள்ளனர். இந்நிலையில், பேருந்தின் முன்பாக 2 இருசக்கர வாகனத்தில் 5 பேர் பேருந்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இதனால், ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டு அவர்களை முந்திச் சென்று, “வழிவிட்டு போக முடியாதா? என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பேருந்து சேனன் கோட்டையில் நின்ற நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை, அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் மீட்டு, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரில் 4 பேரை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ், 4 பேரை மீட்டு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், மாரிமுத்து (48), சீனிவாசன் (39), மாரியம்மாள் (36) மற்றும் 19 வயது இளைஞர் ஒருவர் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் நடராஜ் (40) என்பதும் தெரிய வந்துள்ளது.