அஞ்சல் அட்டை மூலம் பொதுமக்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்! - Lok sabha election 2024
Published : Apr 11, 2024, 5:09 PM IST
திருவண்ணாமலை: 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு, வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்கள் இருவர் 2024 அஞ்சல் அட்டைகளில் விழிப்புணர்வு வாசகங்களை எழுதி வாக்களிக்க உள்ள நபர்களது முகவரிக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் - ரத்னா தம்பதி. இவர்களுக்கு திவ்யா ஸ்ரீ எனும் மகளும், கமலேஷ் எனும் மகனும் உள்ளனர். அக்கா தம்பி இருவரும் அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் இருவரும் இணைந்து புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். இருவரும் 2024 அஞ்சல் அட்டைகளை வாங்கி அதில் ''உங்கள் வாக்கு உங்கள் உரிமை, தவறாமல் வாக்களியுங்கள்'' என எழுதி பொதுமக்களிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இது குறித்து மாணவி திவ்யா ஸ்ரீ கூறுகையில், “2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2024 அஞ்சல் அட்டைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை எழுதியுள்ளோம். இதன் நோக்கம் நாம் அனைவரும் 100% வாக்கை அளிக்க வேண்டும் என்பது தான். இதனை அஞ்சல் அட்டையில் எழுதக் காரணம், அஞ்சல் அட்டை பழங்காலத்தில் மகிழ்ச்சியின் அடையாளமாக இருந்தது. மேலும் அஞ்சல் அட்டையை நினைவு கூறும் வகையிலும் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்”, என கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்த விழிப்புணர்வு அஞ்சல் அட்டையினை தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளனர். இந்த அஞ்சல் அட்டைகளை இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ள நபர்களின் முகவரிக்குத் தபால் மூலம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவர்களது இந்த முயற்சியை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டியுள்ளனர்.