நெல்லை அருகே கார் கவிழ்ந்து விபத்து; 2 பேர் உயிரிழப்பு.. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி - நெல்லை விபத்து
Published : Mar 4, 2024, 10:58 AM IST
திருநெல்வேலி: சேரன்மகாதேவி அடுத்த பத்தமடையைச் சேர்ந்த நண்பர்களாகிய 7 பேர் கங்கணாங்குளம் பகுதிக்கு காரில் சுற்றுலா சென்றனர். அப்போது சுற்றுலா சென்றுவிட்டு நேற்று (மார்ச் 3) வீடு திரும்பும்போது ஏற்பட்ட இவர்களது கார் கவிழ்ந்து விபத்துள்ளானதில் அலி திவான் மைதீன், முகமது சைல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.
கங்கணாங்குளம் பகுதியில் உள்ள மணிமுத்தாறு கால்வாயில் குளித்து விட்டு, காரில் குரங்குமடம் பகுதி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே திடீரென வந்த நாய் மீது கார் மோதி கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பத்தமடையைச் சேர்ந்த அலி திவான் மைதீன், முகமது சைல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் நாகூர் மைதின், அசன், பாவா மைதீன், அக்பர், காதர் மைதீன் உள்ளிட்ட 5 பேர் படுகாயங்களுடன் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே, இந்த கார் விபத்து குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த 7 நண்பர்கள் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் கார் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.