திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை - ஆளுநர் ரவி
Published : Jan 31, 2024, 12:19 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி கோயில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். 3ஆம் குலோத்துங்க சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கம்பகரேஸ்வர சுவாமி கோயில் சச்சிதானந்த விமானம் உட்பட 4 பெரிய கோபுரங்களைக் கொண்டது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு, 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், நேற்றிரவு கோயில் வளாகத்தில், உலக மக்கள் நன்மைக்காக மாபெரும் 1008 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விளக்கேற்றி அன்னப்பிரசாதம் வைத்து, சிவாச்சாரியார் கூறிய மந்திரங்களுடன் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். இதன் நிறைவாக, கற்பூர தீபம் காட்டி திருவிளக்கு பூஜையினை நிறைவு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து 2ஆம் கால யாக பூஜையும், இரவு 3ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.