தீக்குச்சியில் கருணாநிதியின் பேனாவை 2 செ.மீட்டரில் செதுக்கிய ஓவியர்! - தீக்குச்சியில் கலைஞர் பேனா
Published : Feb 3, 2024, 8:00 PM IST
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரதேசி கோபிராம் (54). இவர் ஓவிய ஆசிரியராக 5 வருடம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இவர் கடுகில் உலக வரைபடத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில், ஒரு தீக்குச்சியில் இரண்டு மில்லி மீட்டர் அகலமும், இரண்டு சென்டி மீட்டர் உயரமும் கொண்ட கருணாநிதியின் பேனாவை செய்து அசத்தியுள்ளார். மேலும், கலைஞரின் பேனா பேசுகிறது என்ற தலைப்பில் கவிதையும் எழுதி உள்ளார்.
இது குறித்து ஓவியர் கோபிராம் கூறுகையில் “கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு, தமிழக அரசு கருணாநிதியின் பேனாவை நிறுவ உள்ளது. இதற்காக கருணாநிதியின் பேனாவை சிறிய அளவில் செதுக்கி உள்ளேன். அதன் அகலம் 2 மி.மீ, நீளம் 2 செ.மீ ஆகும். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், பேனா எழுதக் கூடிய நிப்பின் உயரம் 3 மி.மீ, அகலம் 2 மி.மீ ஆகும்.
அதன் மையத்தில் ஒரு சிறிய புள்ளியில் கடுகில் நான்கில் ஒரு பங்கு உள்ளது போல் செய்துள்ளேன். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டு இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.