திருத்தணி முருகன் கோயில் சித்திரை மாத பிரம்மோற்சவம் விழா.. களைகட்டிய திருத்தேரோட்டம் - TIRUTTANI MURUGAN TEMPLE
Published : Apr 21, 2024, 1:00 PM IST
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில், சித்திரை மாதம் பிறந்தது முதல் இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மலைக்கோயிலில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், முருகனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில், மங்கள கைலாய வாத்தியங்கள் முழங்க, தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இதையொட்டி, கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.