என்ன ரூ.50-க்கு லெக் பீசோட பிரியாணியா? தேனி ஹோட்டல் முன் குவிந்த மக்கள்! - உணவகம் முன் குவிந்த பொதுமக்கள்
Published : Feb 6, 2024, 1:46 PM IST
|Updated : Feb 8, 2024, 4:50 PM IST
தேனி: ஆண்டிபட்டி நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் 'தாய் பாஸ்ட் புட்' என்ற உணவகம், நேற்று (பிப்.5) முதல் பிரியாணி விற்பனை செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக, நேற்று காலை 11.30 மணி முதல் மாலை 3 மணி வரை 100 ரூபாய் மதிப்புடைய பிரியாணி, தள்ளுபடி விலையில் 50 ரூபாய்க்கு லெக் பீஸ் உடன் வழங்கப்படும் என சுவரொட்டிகள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் காலை முதலே உணவகம் முன்பு பிரியாணியை குறைந்த விலையில் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூடியது. இந்நிலையில், காலை 11.30 மணிக்கே பிரியாணி வழங்குவதாக அறிவித்திருந்த உணவகம், மதியம் ஒரு மணி ஆகியும் பிரியாணி வழங்கவில்லை. மேலும், கடையும் திறக்காமல் அடைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் கூட்டம் கடையின் முன்பு அலைமோதியது.
இதன் காரணமாக, தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர், இரண்டு மணிநேரம் கழித்து பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இத்தகவலை அறிந்த மக்கள் கூட்டம் அதிகமாக அங்கு கூடியதையடுத்து, நெடுஞ்சாலையில் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர், பிரியாணி வாங்க வந்த பொதுமக்களை விரட்டி உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.