கோயம்புத்தூர்: ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு ஜக்கி வாசுதேவ் “மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், பிரபலங்கள் உள்பட ஏராளமான மக்கள் கலந்து கொள்வர். அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மகா சிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தில், 'கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2025-ஆம் ஆண்டு மகா சிவராத்திரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மேற்கொண்டுள்ள, ஈஷா அறக்கட்டளை மற்றும் பக்தர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரி விழாவானது ஆன்மீக ரீதியில் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும் விரதம், தியானம், அறியாமை ஆகியவற்றின் மீதான அறிவின் வெற்றியையும் குறிக்கிறது.
மகா சிவராத்திரி என்பது சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணம் நடைபெற்ற நாள். இந்த நாளில் பக்தி, பிரார்த்தனைகள், சுய கட்டுப்பாடு மூலம் பக்தர்கள் ஆன்மீக ரீதியாக முன்னேறவும், உயர்ந்த தெய்வீக சக்தியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆதியோகி சிலைகளை நிறுவும் முயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மகா சிவராத்திரி புவியியல், கலாச்சாரம், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தடைகளைத் தாண்டி, மனிதகுலத்தை அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் பொதுவான புள்ளியில் இணைக்கின்றன. இயற்கையின் மீதான மதிப்பை வளர்க்கிறது. சிவபெருமானின் அருள் பெற சத்குரு தலைமையில் நடைபெறும் 2025 ஈஷா மகா சிவராத்திரி விழா வெற்றியாக அமையட்டும்.' என்று பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Thank you Hon’ble Prime Minister for your warm wishes. All should experience the grandeur of #Mahashivaratri, one of the most significant festivals of Bharat. Adiyogi’s contribution in the making of this Civilization & for the future of Humanity is such that Adiyogi shall not… pic.twitter.com/SQrab3cjI2
— Sadhguru (@SadhguruJV) February 22, 2025
இதற்கு நன்றி தெரிவித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பாரதத்தின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு ஆதியோகியின் பங்களிப்பு எத்தகையது என்றால், அவர் கடந்த காலத்தின் சின்னமாக இல்லாமல், எதிர்கால தலைமுறையினருக்கு தூண்டுதலாய் இருப்பார். மனித பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்துக்குமான தீர்வுகளும் நமக்குள் உள்ளது. இதுவே ஆதியோகியின் பங்களிப்பின் அடிப்படை.” அவர் குறிப்பிட்டுள்ளார்.