தஞ்சாவூரில் சதுரங்கம் போட்டி; 12 மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி
Published : Feb 26, 2024, 11:38 AM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட சதுரங்கம் சங்கம் சார்பில், கும்பகோணம் ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று(பிப்.25) நடைபெற்றது. இதில் 7, 9, 11, 15 வயதிற்குட்பட்டோர் என 4 பிரிவுகளாக நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, ஒவ்வொரு பிரிவுகளிலும் அதிக புள்ளிகளுடன் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
மேலும், 7 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்ற 2 மாணவர்கள் 2 மாணவிகள் என நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெறும் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்ற 4 மாணவர்கள் மற்றும் 4 மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வரும் மே மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெறும் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளைப் பன்னாட்டுத் தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் டி.ஆர்.வினோத், செயலாளர் டி.சந்தீப் குமார் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் தஞ்சை மாவட்ட சதுரங்க சங்க செயலாளர் டி.சிலம்பரசன் தலைமையிலான குழுவினர் முன்னின்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.