விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் இன்று (ஜனவரி 4) காலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் நான்கு அறைகள் தரைமட்டம் எனவும், 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பயநாயக்கன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் (பெசோ) பெற்ற இந்த ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆறு பேர் உயிரிழப்பு:
பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், அந்த வெடி விபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமானதாகவும், அதில் அங்கு பணியில் இருந்த வேல்முருகன், நாகராஜ், காமராஜ், மீனாட்சிசுந்தரம், சிவகுமார், கண்ணன் ஆகிய 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்குப் பதிவு:
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கான நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு:
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (வயது 56), குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 54) மற்றும் காமராஜ் (வயது 54), வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (வயது 54), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (வயது 46), செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 37) ஆகிய ஆறு நபர்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இதையும் படிங்க: கோவையில் கேஸ் டேங்கர் லாரி விபத்து சம்பவம்: லாரி ஓட்டுநர் கைது!
இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.