மக்களை புலிகளிடமிருந்து பாதுகாக்க நூதன வழிபாடு... சத்தியமங்கலம் வனப்பகுதியில் கோலாகலம்! - Alamalai Brahmeswara Ayyan temple - ALAMALAI BRAHMESWARA AYYAN TEMPLE
Published : May 15, 2024, 1:13 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தலமலை வனச்சரத்தில் உள்ள ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் ஆலயத்தில், மக்களை புலி சிறுத்தையிடமிருந்து காக்க, புலி மற்றும் யானை வாகனத்தில் எழுந்தருளி ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை அடர்ந்த மாவள்ளம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் ஆலய குண்டம் விழா சுவாமிக்கு மஜ்ஜன தீபாராதனை, 101 பால்குட சேவையுடன் துவங்கியது. விழாவையொட்டி ஆசனூரில் இருந்து கும்பேஸ்வர சுவாமி அழைத்து வருதல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அம்மன் புகழ் பாடும் பக்தர்கள் களியாட்டம் நடைபெற்றது.
இதில் மாவநத்தம்,பெஜ்ஜலட்டி, இட்டரை,தடசலட்டி, ராமரணை, ஆசனூர் ஆகிய மலைக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நடனம் ஆடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விவசாயம் மேம்படவும் மக்களை புலி சிறுத்தையிடமிருந்து காக்கவும் புலி மற்றும் யானை வாகனத்தில் ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த நிகழ்வு நடைபெறுவதால் பக்தர்கள் தீ மூட்டி சமையல் செய்யக்கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.