கோபி அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - ஈரோடு விபத்து - ஈரோடு விபத்து
Published : May 9, 2024, 5:17 PM IST
ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கணபதிபாளையம் பிரிவில் சுற்றுலா வேன், இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் கோபிசெட்டிபாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்துக்குள்ளான சுற்றுலா வேனில் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளர்கள் 17 பேர் என்பதும், மேலும் 5 பேர் அவர்களது உறவினர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த மே 6ஆம் தேதி வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவர் அந்த வேனை ஓட்டிச் சென்றுள்ளர். இவர்கள் கொடிவேரி அணையில் குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, காசிபாளையம் - கணபதிபாளையம் பகுதியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்கு வேன் டிரைவர் செல்வன், வேனை சாலையின் வலது புறம் திருப்பிய போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோரம் இருந்த ஆலமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சுற்றுலா வேனில் பயணம் செய்த 12க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கடத்தூர் காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த விபத்தில் சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளாள சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.