அடுத்தடுத்து 2 ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சி! சிசிடிவி கேமிராவை உடைத்து தப்பிய நபர்! - ஏடிஎம் கொள்ளை முயற்சி
Published : Jan 20, 2024, 5:36 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை உடைத்து பணம் திருட முயற்சி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்காணிப்பு கேமிரா காட்சி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள பிரதான சாலையில், இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்.சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏடிஎம் மையங்களில் கடந்த 10ஆம் தேதி இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.
அந்த மர்ம நபர் ஏடிஎம் இயந்திரங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று, தோல்வியடைந்து வெளியே வந்த பார்த்துள்ளார். அப்போது வெளியே இருந்த சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து வங்கி தரப்பில் இருந்து புகார் ஏதும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த மர்ம நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.