இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்ததாக ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்! - Rameswaram Fishermen Protest - RAMESWARAM FISHERMEN PROTEST
Published : Sep 14, 2024, 9:01 PM IST
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் கச்சதீவுக்கும், தலை மன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 8 மீனவர்களையும் சிறைபிடித்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறைச்சாலையில் அடைத்தனர். அங்கு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு மொட்டை அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அவர்களது வழக்கு விசாரணைக்கு வந்த போது, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில், தமிழக மீனவர்களை இலங்கை அரசு மொட்டை அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறி, அதனைக் கண்டித்து தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரியும், தமிழக மீனவர்கள் கைது செய்வதைக் கண்டித்தும் பாம்பன் பகுதி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.