ஹைதராபாத்தில் வேட்டையன் ஷூட்டிங்.. சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கிளிக்ஸ்!
Published : Feb 27, 2024, 12:53 PM IST
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று (பிப்.27) படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் புரப்பட்ட அவர், விமான நிலையத்தில் ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் திரைப்படத்தை, இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புகள் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்தது. இதைத் தொடர்ந்து, தற்போது வேட்டையன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்ல புறப்பட்டார். அப்போது விமான நிலையத்தில் அவரைப் பார்க்க காத்திருந்த ரசிகர்களுடன், அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.