தமிழக திருப்பதியில் புரட்டாசி பிரமோற்சவம் கோலாகலமாக துவங்கியது - festival at oppiliappan Temple - FESTIVAL AT OPPILIAPPAN TEMPLE
Published : Oct 4, 2024, 8:05 PM IST
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமி, தமிழக திருப்பதி என்றும், தென்னக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் நின்ற கோலத்தில், ஒரே தாயாரான பூமி தேவியுடன் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார். பொய்கையாழ்வார், பேயாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது இத்தலம்.
இங்கு மூலவர் பெருமாளுக்கு எப்போதும் உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழக வைணவ தலங்களில் முதன்முதலில் இங்கு மட்டுமே துலாபாரம் அமைக்கப்பட்டது என்பதும், திருமலை திருப்பதியை போலவே தமிழகத்தில் இந்த வைணவ தலத்தில் தான் புரட்டாசி பிரமோற்சவம் நடைபெறுகிறது என்பது சிறப்பு. இத்தகைய பெருமைக்குரிய இந்த வைணவ தலத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை உற்சவர் பெருமாளான பொன்னப்பர் பூமிதேவி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கருடாழ்வார் வரைந்த கொடியினை ஹஸ்த நட்சத்திரம், துலா லக்னத்தில் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் தீபாராதனைகள் காட்டப்பட்டது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 4ம் நாளான 7ம் தேதி திங்கட்கிழமை இரவு வெள்ளி கருட வாகனத்தில் பெருமாளும், வெள்ளி ஹம்ச வாகனத்தில் தாயாரும் திருவீதி உலா நடைபெறுகிறது. 26ம் தேதி சனிக்கிழமை சிரவணத்தன்று, காலை 8 மணிக்கு கன்னி லக்னத்தில், ரதா ரோஹணம் (கோ ரதம்) வடம் பிடிக்கப்படுகிறது. பிறகு கோயில் நேத்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெறும். பின்னர் 10ம் நாளான 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மூலவர் திருமஞ்சனமும், நண்பகல் அன்னப்பாவாடை உற்சவத்துடன் இவ்வாண்டிற்கான புரட்டாசி பிரமோற்சவம் நிறைவு பெறும்.