ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 14 டன் எடையில் 18 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை! - பக்தர்கள் வழிபாடு
Published : Feb 5, 2024, 8:22 AM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசி வனப்பகுதியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14 டன் எடை கொண்ட 18 அடி உயர சிவலிங்கம், சிறப்பு பூஜைகளுடன் நேற்று (பிப்.4) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஏற்கனவே, சிவன் அடியார்கள் தானம் கொடுத்த ஏராளமான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே, ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 14 டன் எடை கொண்ட 18 அடி உயரமுள்ள, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கமானது பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முன்னதாக, சிவலிங்கத்தின் பீடம் மற்றும் லிங்கம் நிலைநிறுத்தும் பணியானது கிரேன் மூலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, மலர் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த சிவலிங்கம் பிரதிஷ்டை நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.