லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரான எல்ஏ என்றழைக்கப்படும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் காட்டுத்தீயில் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாயின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச் சுற்றி காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறது அமெரிக்காவின் திரைப்பிரபலங்கள் வசிக்கும் ஹாலிவுட் பகுதி உள்ளிட்ட லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் காட்டுத் தீயை கட்டுப்படுத்தமுடியாமல் தவிக்கின்றனர்.
அதிகரிக்கும் தீயின் வேகம்: புயல்காற்று போல காற்றி வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் தீப்பொறிகள் காற்றின் வேகத்தில் பறந்து ஒவ்வொரு வீடாக தீப்பற்றி வருகின்றன. கலிபோர்னியா மாநிலத்தின் ரியல்எஸ்டேட் வர்த்தகத்துக்கு பெயர் போன லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் காட்டுத்தீயின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்பு படையின் தலைவர் அந்தோணி மாரோவ்னி, "தொடர்ந்து தீயின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் எங்களது வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். எங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றோம். போதுமான தீயணைப்பு வீரர்கள் இல்லாத சூழலில், அனைத்து துறைகளை சேர்ந்தோரும் தீயை அணைப்பதில் கைகோர்த்துள்ளனர்,"என்றார்.
கிராமன்ஸ் சைனீஸ் தியேட்டர், வாக் ஆஃப் ஃபேம் மற்றும் எல் கேபிடன் தியேட்டர் போன்ற இடங்களைக் கொண்ட ஹாலிவுட் பவுல்வர்டு பகுதிக்கு சில நூறு மீட்டர் தொலைவில் ஹாலிவுட் மலைப் பகுதியில் 8ஆம் தேதி மாலை திடீரென காட்டு தீ நேரிட்டது. இதனைத் தொடர்ந்து காட்டுத்தீ பரவுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வீடுகளை விட்டு மக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் வான்வெளியில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் வெளியேற அறிவுறுத்தல்: தீயணைப்பு பணி குறித்து பேசிய லாஸ் ஏஞ்செல்ஸ் தீயணைப்புதுறையை சேர்ந்த மார்க்கரெட் ஸ்டீவார்ட், "தாமதிப்பதற்கு இது நேரமல்ல. மக்கள் தீயில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்று விரும்புகின்றனர். உங்கள்(மக்கள்) வாகனங்களை எடுத்துக் கொண்டு, கார் போன்ற வாகனங்கள் இல்லாத உங்கள் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கி செல்லுங்கள்,"என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: யுஜிசி வெளியிட்ட திருத்தப்பட்ட வரைவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்!
காட்டுத்தீ பரவியதை அடுத்து ஆயிரகணக்கானோர் ஒரே நேரத்தில் வெளியேறியதால் சாலைகளில் நெரிசல் நேரிட்டது. ஷரோன் இபாரா என்ற இளம் பெண் கூறுகையில், " நான் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர், அவரது இரண்டு குழந்தைகள் ஹாலிவுட் பகுதியில் வசிக்கின்றனர். அவர்களுக்கு உதவ முடியுமா என்பதற்காக சென்று கொண்டிருக்கின்றேன். நான் மிகவும் பதட்டமாக இருக்கின்றேன். எனினும் நேற்றை விடவும் இன்று காற்றின் வேகம் குறைவாக இருக்கிறது," என்றார்.
10000 ஹெக்டேருக்கு அதிகமாக பாதிப்பு: மணிக்கு 160 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால், ஆடம்பர பங்களாக்கள் அமைந்துள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் மின்னல் வேகத்தில் தீ பரவி வருகிறது. இதுவரை 6500 ஹெக்டேர் பரப்பளவு பகுதிகள் தீயில் எரிந்திருக்கின்றன. அதே போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாகி உள்ளன. வடக்குப் பகுதியில் உள்ள அல்டடேனா பகுதியை சுற்றிலும் 4300 ஹெக்டேர் பரப்பளவு தீயில் எரிந்துள்ளது. புறநகர் பகுதிகளிலும் தீ பரவி வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் ஷெரீப், ராபர்ட் லுனா, "இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலர் இறந்திருக்கலாம் என்று அச்சப்படுகின்றோம்,"என்றார். காட்டுத்தீயால் பாதிப்புக்கு உள்ளான அல்டடேனா பகுதியை சேர்ந்த வில்லியம் கோன்சலஸ், "நடைமுறையில் எல்லாவற்றையும் நான் இழந்து விட்டேன். தீயானது எங்களது கனவு அனைத்தையும் காலி செய்து விட்டது,"என்றார்.
பிரியங்கா சோப்ரா கவலை: லாஸ் ஏஞ்செல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் அருகே மாலிபு பகுதியில்தான் பெரும்பாலான ஹாலிவுட் நட்சத்திரங்கள், சினிமா தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டோர் வசித்துவருகின்றனர். இந்த பகுதியை சுற்றி காட்டு தீ பரவியதில் லட்சகணக்கான பொருட் செலவில் கட்டப்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக மாண்டி மூர், பாரிஸ் ஹில்டன் மற்றும் கேரி எல்வெஸின் போன்ற நட்ச்ததிரங்களின் வீடுகள் இந்த காட்டுத்தீயில் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, லாஸ் ஏஞ்செல்ஸ் தமக்கு தாய் வீடு போல என்று அடிக்கடி கூறுவது வழக்கம். இந்த காட்டுத் தீ குறித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் பதிவுகளில் அவர் கவலை தெரிவித்துள்ளார். "பாதிக்கப்பட்ட அனைவரின் எண்ணமாகவே நான் இருக்கின்றேன். நாம் அனைவரும் இந்த இரவை பாதுகாப்பாக கழிப்போம் என்று நம்புகின்றேன்,"என்று கூறியுள்ளார்.
காட்டு தீ பரவல் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது இத்தாலி சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தீயை அணைப்பதற்கான எல்லா பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தீயணைக்கப்பட்டு விடும்,"என்று கூறினார்.