12 டன் எடை கொண்ட 17 அடி உயரமுள்ள ஒரே கல்லினாலான ஜோதி சிவலிங்கம் பிரதிஷ்டை! - Erode Kodi Lingam Temple
Published : Sep 1, 2024, 9:19 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது கோயில் வளாகத்தில் உள்ள ஒரே கல்லினால் ஆன 12 டன் எடை மற்றும் 17 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிவலிங்கத்தில் ஒரு லட்சத்து எட்டு லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளது இதன் சிறம்பம்சமாகும்.
முன்னதாக, விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு, பின்னர் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க சிவலிங்கத்தை கிரேன் மூலம் பீடத்தில் நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து, திருமஞ்சனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேக பூஜை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அலங்கார பூஜை மற்றும் தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து திருப்பணிக்குழு தலைவர் கருப்புச்சாமி கூறுகையில், “உலகிலேயே ஒரே கல்லில் 12 டன் எடை கொண்ட 17 அடி உயர சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது சிறப்பு. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஒவ்வொருவரும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும், சிவலிங்கம் பூஜை, பிரதிஷ்டை வழிபாடுகள் தினந்தோறும் நடத்தப்படுகிறது” என்றார்.