வாக்காளர்களை ஒருமையில் பேசிய தேர்தல் மைய அதிகாரி..குண்டுகட்டாக வெளியேற்றிய போலீசார்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 20, 2024, 11:34 AM IST
திருநெல்வேலி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அடுத்துள்ள வி.கே.புரத்தில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் அதிகாரி ஜெஸ்டின் கோவில் பிள்ளை என்பவர், வாக்களிக்க வரும் வாக்காளர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், வாக்குப்பதிவானது மந்தமாக செயல்படுவதாக வாக்காளர்கள் புகார் அளித்து தேர்தல் அதிகாரியை எதிர்த்து குற்றசாட்டி அங்கு திரண்டனர். இதனையடுத்து, அம்பாசமுத்திரம் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரியை மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சியர் உத்தரவை ஏற்க முடியாது என்று கூறி பிரச்சனை செய்துள்ளார்.
இதையடுத்து, அவரை வட்டாட்சியர் உதவியுடன் காவல்துறையினர் வாக்கு மையத்திலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றினர். இதனால், இந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பெயரில் தேர்தல் மைய அதிகாரியாக அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் என்பவரை நியமித்து தேர்தல் நடைபெற்றது.