கோவை கீரணத்தம் அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவோம்..! மாற்றுத்திறனாளி நபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு! - Coimbatore district news
Published : Jan 30, 2024, 12:43 PM IST
கோயம்புத்தூர்: கீரணத்தம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் இருப்பதாகவும் இது குறித்த பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் என்ற மாற்றுத்திறனாளி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜன.29) மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், “குடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளில் மட்டுமே குடும்பங்கள் குடியிருக்கின்றனர். இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கப்படவில்லை. டேங் பைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை. உபரி நீர் மோட்டார் பழுதடைந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதனை சரி செய்யவில்லை.
குடிநீர் தொட்டிகளுக்கு மூடிகள் இல்லாததால் கொசு உள்ளிட்ட பூச்சி அதில் பெருகி பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்த நிலையில் சிலர் வந்து குறிப்பிட்ட பணிகளை மட்டும் செய்தனர். பின் பிறகு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் அதனை தொடர்ந்து யாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை.
மேலும், இந்த குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகள் பலரும் வசித்து வருகின்றனர். அவர்கள் குடியிருப்பில் உள்ள பல்வேறு பிரச்சினைகளால் தினம்தோறும் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைவரும் குடியிருப்பை காலி செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்” என கூறினார்.