கோயம்பேட்டில் திடீரென தீ பிடித்து எரிந்த ஆம்னி பஸ்.. விண்ணை முட்டிய புகை - சென்னையில் பரபரப்பு! - Fire accident in Koyambedu
Published : Jul 4, 2024, 1:51 PM IST
சென்னை: கோயம்பேடு பகுதியில் அங்காடி நிர்வாக குழுவிற்குச் சொந்தமான வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. அங்கு ஆம்னி பஸ், ஆட்டோ, வேன், கார் போன்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று மாலை அங்கு நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அதுமட்டுமின்றி, அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 ஆட்டோக்கள், வேன், கார் என அனைத்து வாகனத்திலும் தீ வேகமாகப் பரவியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஆனால் ஆம்னி பஸ், ஆட்டோ உள்ளிட்ட 10 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துக் கொளுத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.