பகவத் கீதை ஸ்லோகங்களை கூறி ஒன்பது வயது சிறுவன் சாதனை! - asian book world record - ASIAN BOOK WORLD RECORD
Published : May 18, 2024, 11:07 AM IST
கோவை: கோவை பந்தைய சாலையை சேர்ந்த மணிகண்டன் மற்றும் நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன். தற்போது நான்காம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது, சிவ புராணம் பாடுவது மற்றும் அனுமன் சாலிஷா என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள ராதா என்பவர், பகவத் கீதை சிறுவன் ஆர்வமுடன் படிப்பதை கவனித்துள்ளார். இவரின் திறமையை கண்ட ராதா, பகவத் கீதையின் சமஸ்கிருத தியான ஸ்லோகங்களை கூறி பயிற்சி அளித்துள்ளார். சிறுவன் திரிசூல வேந்தன், ஒன்பது அத்தியாங்கள் கொண்ட பகவத் கீதை தியானா ஸ்லோகங்களை அச்சு பிசகாமல் தெளிவாக கூற துவங்கியுள்ளார்.
சிறுவன் திரிசூல வேந்தனுக்கு முறையாக அளிக்கப்பட்ட பயிற்சியால், சமஸ்கிருத மொழியில் பகவத் கீதை தியானா ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி அசத்தியுள்ளார். இவரது இந்த சாதனை ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்,”ஏற்கனவே பஞ்சாங்கத்தை வேகமாக படித்துள்ளேன், அதன் தொடர்ச்சியாக பகவத் கீதை தியானா ஸ்லோகங்களை கூறுவதில் பயிற்சி பெற்றதால் இந்த சாதனையை செய்ய முடிந்தது" என்றார் திரிசூல வேந்தன் பெருமிதத்துடன். ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட சமஸ்கிருத பகவத் கீதா தியானா ஸ்லோகங்களை கோவையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கூறுவதை பலதரப்பினரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.