நீலகிரியில் வீடு வசதியின்றி தவிக்கும் கிராமம்.. மாவட்ட ஆட்சியர் அலட்சியம் காட்டுவதாக புகார்..!
Published : Feb 19, 2024, 8:57 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று (பிப்.19) நடைபெற்றது. இதில், பாலகொலா ஊராட்சிக்குட்பட்ட முதுகல கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள் வீடு வசதி செய்து தர வேண்டி மனு அளித்தனர்.
முன்னதாக, பலமுறை மனு அளித்தும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டும் நிலையில் இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்திலும் ஆட்சியர் மனுவை வாங்க மறுத்ததுடன் மூன்று லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று சொன்னதாகக் கூறுகின்றனர். இந்நிலையில், கூட்டத்திலிருந்து வெளியேறிய கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மனுக்களைக் கிழித்து வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பைரவி தெரிவிக்கையில், "பல வருடங்களாக ஏழ்மையில் உள்ள தங்கள் தமிழக அரசின் இலவச வீடு திட்டத்தில் தங்களுக்கு வீடு வழங்கப் பலமுறை மனு அளித்தும் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மஞ்சூர் பகுதியில் தங்களுக்கு வீடு வழங்குவதாக உறுதி அளித்து தங்களிடம் கையொப்பம் பெற்றுச் சென்றனர். தற்போது, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த போது மனுவை வாங்க மறுத்ததுடன் மூன்று லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி தங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களை அலுவலகத்திலிருந்து வெளியேற வேண்டு எனக் கூறினார்.
எங்களுக்கு முறையான பதில் கிடைக்கப்பெறவில்லை என்றால் நீலகிரி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடத்துவோம்" என்றார்.