கேராளாவைத் தொடர்ந்து திருச்செந்தூரிலும் கொத்து கொத்தாக காகங்கள் உயிரிழப்பு.. பறவைக்காய்ச்சல் பரவலா? - Mysterious death of crows
Published : Jun 19, 2024, 10:37 AM IST
தூத்துக்குடி: திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழநாலுமூலைக்கிணறு பகுதியில் வானத்தில் பறந்து கொண்டிருந்த காகங்கள் திடீரென கொத்து கொத்தாக கீழே விழுந்தன. ஒரே நேரத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட காகங்கள் கீழே விழுந்து உயிருக்குப் போராடின. இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உயிருக்குப் போராடிய காகங்களை உடனடியாக மீட்டு தண்ணீர் கொடுத்துக் காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் பத்து காகங்களும் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உயிரிழந்த காகங்களை பாடை கட்டி ஏற்றி, குழி தோண்டி புதைத்து பாலூற்றி நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். இளைஞர்களின் இந்த மனிதநேய செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா மாநிலம், ஆலப்புழை மாவட்டம், முகம்மா கிராமத்தில் பறவைக் காய்ச்சலால் ஏராளமான காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கீழே விழுந்தன. தற்போது இந்தப் பகுதியிலும் கொத்து கொத்தாக காகங்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.