"மத்திய அரசை கண்டு பயந்து இந்தியா கூட்டணியை கைக்கழுவி விடுவார் ஸ்டாலின்" - டிடிவி தினகரன்! - வன்னியர்கள் இட ஒதுக்கீடு
Published : Jan 28, 2024, 3:32 PM IST
விழுப்புரம்: செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "அமமுக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை. கூட்டணி முடிவானவுடன் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது.
அவருடன் இருந்த விசுவாசிகளுக்கும் துரோகம் இழைத்தார், அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழ்நாடு மக்களுக்கும் துரோகம் இழைத்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை கைக்கழுவி விட்டு தனித்து போட்டியிடும் சூழல் நிலவுகிறது. திமுக தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்லியில் மத்திய அரசை கண்டால் பயம். இந்தியா கூட்டணியை டெல்லியை கண்டு பயந்து கைக்கழுவி விடுவார். அதிமுக பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் பேரிடரை சந்திக்கும். பழனிசாமி சிறுபான்மையினர் மக்களின் தோழன் எனக் கூறி ஏமாற்றி வருகிறார். இதற்கு முன் வன்னியர்களுக்கு தோழனாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து ஏமாற்றியது போல தென் மாவட்டங்களிலும் பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார்" என்று கூறினார்.