உடல் நலக்குறைவு காரணமாக 2 நாட்களாகச் சிகிச்சை பெற்று வரும் பெண் காட்டு யானை.. - காட்டு யானைக்கு சிகிச்சை
Published : Jan 26, 2024, 9:08 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் சிறுமுகை வனச் சரகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு மருத்துவ குழுவினர் இரண்டாவது நாளாகத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் வன அலுவலர் மனோஜ் தலைமையில் வனப் பணியாளர்கள், சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதி அருகே 200 மீட்டர் தொலைவில் லிங்காபுரம் கிராமத்தில் உள்ள முருகன் என்பவரின் விவசாயத் தோட்டத்தில் பெண் காட்டு யானை ஒன்று படுத்த நிலையிலிருந்ததைக் கண்டுள்ளனர்.
இது குறித்து வனச்சரக அலுவலர் மனோஜ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜுக்குத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் மற்றும் வனப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று படுத்திருந்த பெண் யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை அளித்தனர்.
மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் படுத்து இருக்கும் பெண் யானையை எழுந்து நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை, இதனைத் தொடர்ந்து யானைக்கு குளுக்கோஸ் மற்றும் சீராக ரத்த ஓட்டம் செல்லும் வகையில் மருந்து மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது. இரவு ஆனதால் கூட்டத்துடன் வந்த யானை, திரும்பச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த யானைக் கூட்டத்துடன் செல்லாமல் படுத்து இருந்ததால் இரண்டாவது நாளாகக் காட்டு யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல் கட்டமாக யானையின் உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் யானையின் முன்னங்கால்களில் ரத்த ஓட்டம் இல்லாததால் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை என்பதைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து ரத்த ஓட்டத்தைச் சீராக்க தற்போது மருத்துவ குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து கிரேன் உதவியுடன் யானையை நிற்க வைக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு நேற்று முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று இரண்டாவது நாளாக மருத்துவ குழுவினர் யானைக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
யானையின் உடலில் வெளிப்புற காயங்கள் ஏதுமில்லை, உட்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே யானை படுத்துள்ளது. மருத்துவ குழுவினர் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே யானைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்ன என்பது குறித்துத் தெரிய வரும். இருப்பினும் யானையைக் காப்பாற்ற மருத்துவ குழுவினர் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலைக்குள் சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.