அண்ணாமலையார் கோயிலில் மாசி மகா பிரதோஷம்; பெரிய நந்திக்கு சிறப்பு பூஜை - Tiruvannamalai Annamalaiyar Temple
Published : Mar 9, 2024, 9:17 AM IST
திருவண்ணாமலை: மாசி மாத மகா பிரதோஷ தினத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நேற்று (மார்ச் 8) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, அமாவாசை மற்றும் பௌர்ணமி வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, மாசி மாதம் மகா பிரதோஷம் சிவராத்திரி திருநாளான நேற்று நடைபெற்றது. இதில், பெரிய நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, பெரிய நந்தி பகவானுக்கு அறுகம்புல், வில்வ இலை, சாமந்திப் பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. மேலும், சிவராத்திரி விழா அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'அண்ணாமலையாருக்கு அரோகரா..' என கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.