சேலத்தில் உள்ள மிக உயரமான நந்தி சிலைக்கு மகா கும்பாபிஷேகம்! - SALEM SPECIAL NANDHI STATUE
Published : Feb 3, 2025, 10:27 AM IST
|Updated : Feb 3, 2025, 12:26 PM IST
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வாழப்பாடி வட்டம் வெள்ளாள குண்டம் ஏரி சாலை பகுதியில் ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (பிப்.2) அந்த நந்தி சிலைக்கு மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக யாக குண்டம் வளர்க்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களைக் கொண்டு நந்தி சிலை மற்றும் கோபுரங்கள் மீது அபிஷேகம் நடைபெற்றது.
உலகிலேயே மிக உயரமான நந்தி சிலையான இந்த சேலம் பார்வதி நந்தி சிலை, தனது வயிற்றுக்குள் 15 அடி உயரத்தில் சிவபெருமான் அருள் பாலிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம் எனவும், அவ்வாறு அபிஷேகம் செய்வதால் ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும் ஐதீகமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த நந்தியை அபிஷேகம் செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் விலகுவதாகவும், வீட்டில் பண வரவுகள் அதிகரிப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.