பாறை மீது ஹாயாக வேடிக்கை பார்க்கும் சிறுத்தை.. பொள்ளாச்சி கிராமங்களில் பரபரப்பு! - LEOPARD ENTERS POLLACHI VILLAGE - LEOPARD ENTERS POLLACHI VILLAGE
Published : Jul 2, 2024, 4:31 PM IST
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சமீப காலமாக இந்த வனப்பகுதியிலிருந்து அவ்வப்போது வனவிலங்குகள் உணவு தேடி வனப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது.
இதில் யானை, காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் குறித்து ஏற்கனவே பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பெருமாள் சாமி கரடு என அழைக்கப்படும் சேனைக்கல்ராயன் குன்று பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் உணவு தேடி சிறுத்தை ஒன்று வலம் வந்துள்ளது. விவாசய நிலப்பரப்பில் இருக்கும் பாறை மேல் அமர்ந்திருந்த சிறுத்தையைப் பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் விவசாய நிலத்திற்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்த தடயம் இருந்ததாகக் கூறும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இவ்வாறு வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஊருக்குள் வருவது மக்களுக்கு ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.