மருதமலை கோயில் பாதையில் சிறுத்தை நடமாட்டம்.. வெளியான வீடியோ காட்சிகள்! - மருதமலை முருகன் கோயில்
Published : Feb 15, 2024, 11:59 AM IST
கோயம்புத்தூர்: கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். மேலும், கோயில் மலைப் பகுதியில் உள்ளதால், வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், கரடி போன்ற விலங்குகள் படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் அடிக்கடி நடமாடுகின்றன.
இதன் காரணமாக, கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கோயில் நிர்வாகம் சார்பாக சாலை வழிகள், படிக்கட்டுகள் வழிகள், கோயில் வளாகம் போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை சார்பாக மலைக் கோயிலுக்குச் செல்லக்கூடிய பக்தர்கள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இருசக்கர வாகனங்களும், 6.30 மணி வரை நான்கு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்.13) இரவு, மலைக் கோயிலுக்குச் சென்ற பக்தர் ஒருவரின் காரின் முன்பு, முதல் வளைவில் சிறுத்தை ஒன்று ஓடியுள்ளது. பின்னர், வாகனத்தின் வெளிச்சத்தைக் கண்ட அந்த சிறுத்தை, சிறிது தூரம் ஓடி பின்பு வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. அதனை வாகன ஓட்டி, அவரது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.