தமிழகத்தில் தொடரும் மழை: கோவை குற்றாலம், குற்றால மெயின் அருவிக்கு செல்ல தடை! - kovai kutralam closed - KOVAI KUTRALAM CLOSED
Published : Jun 26, 2024, 4:04 PM IST
கோயம்புத்தூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக பல அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், அருவியில் அதிகளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதாலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல போளுவாம்பட்டி வனத்துறை தடைவிதித்து அறிவித்துள்ளது. மேலும், கோவை குற்றாலத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்து, வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் குற்றால அருவிகளின் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குற்றால மெயின் அருவியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையிலும், தொடர்மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு குறையாத நிலையிலும் இன்று மூன்றாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசாரால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அருவிகளிலும் தற்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.