தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காளஹஸ்தீஸ்வரர் கோயில் மாசி மக உற்சவம்; 20 இசைக் கலைஞர்கள் மல்லாரி இசைத்து இசை சமர்ப்பணம்! - காளஹஸ்தீஸ்வர சுவாமி கோயில்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 7:23 AM IST

தஞ்சாவூர்: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் உலகப் பிரசித்திப் பெற்றது. அந்த மகாமகம் திருவிழா காணும் பன்னிரண்டு சைவத்திருத்தலங்களில் ஒன்று, மடத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஞானாம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வர சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமகப் பெருவிழா பத்து நாட்களுக்குக் கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

அதுபோலவே, இந்த ஆண்டும் மாசி மக உற்சவம் கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு விதமான வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து 5ஆம் நாளான நேற்று, விநாயகப்பெருமாள் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், ஞானம்பிகை, காளஹஸ்தீஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனியே ரிஷப வாகனங்களிலும் எழுந்தருள, சிறப்புப் பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. 

தொடர்ந்து, சுவாமிகள் முன்பு, தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் 20 பேர் மல்லாரி இசைத்து சுவாமிகளுக்கு சமர்ப்பித்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர். இதனையடுத்து 10ஆம் நாளான, வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை, மகாமக குளத்தில் நண்பகல் 12 மணியளவில், அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தப் பின்னர், மாசிமக தீர்த்தவாரி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details