அரசுப் பள்ளிக்கு 11 லட்சம் ரூபாயில் சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்! - Nathan Kinaru School - NATHAN KINARU SCHOOL
Published : May 12, 2024, 5:32 PM IST
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள நாதன்கிணறு பகுதியில் பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்த காரணத்தினால், கடந்த சில ஆண்டுகளாக முன்னாள் மாணவர்கள் பள்ளியை தத்தெடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு புதிய வகுப்பறை (Smart Classroom) கட்டியுள்ளனர்.
மேலும், இப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் கேஜி வகுப்புகள் துவங்க உள்ளதால், மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் நேற்று சீர்வரிசை விழா நடத்தினர். இதற்காக 11 லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக்குத் தேவையான அனைத்து சேர், டேபிள், நூலக புத்தகம், விளையாட்டு சாதனங்கள், டிவி, கம்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கியுள்ளனர். பள்ளிக்குத் தேவையான அனைத்து பொருட்களுடன் முன்னாள் மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செண்டை மேளம் முழங்க, ஸ்ரீநாராயண சுவாமி கோயில் முன்பிருந்து ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர்.
இவ்விழாவில் ஊர்த்தலைவரும், பாஜக மாநில வர்த்தகரணி தலைவருமான ராஜக்கண்ணன் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினராக நடிகர் அப்புகுட்டி கலந்து கொண்டார். மேலும், மாணவர்களின் பெயரில் அஞ்சலக டெபாசிட்டும், ஐந்தாம் வகுப்பு படித்துச் செல்லும் மாணவருக்கு சைக்கிள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், பள்ளியில் ஆன்லைன் மூலம் ஆங்கில வழிக்கல்வி பயிற்சி வழங்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.