பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தல்! - snake movement in vathirairuppu - SNAKE MOVEMENT IN VATHIRAIRUPPU
Published : Apr 20, 2024, 6:10 PM IST
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காலனியைச் சுற்றி விவசாயத் தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில் கான்சாபுரம் காலனி அருகே 2 கொடிய விஷமுடைய பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விளையாடியதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாம்புகளைப் பிடிக்கத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிப்பதற்குள் இரண்டு பாம்புகளும் அருகே இருந்த விவசாயத் தோப்பிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது வெயில் காலம் என்பதால் வத்திராயிருப்பு பகுதியைச் சுற்றி பகல் நேரங்களில் அதிக அளவில் பாம்புகள் நடமாட்டம் இருக்கின்றது எனவும், சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போதே பாம்புகள் சாலை கடக்கின்றதால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் நிலை ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வத்திராயிருப்பு பகுதியில் தொடர்ந்து பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனத் தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.