தென்காசியில் பாரம்பரிய உணவுத் திருவிழா.. ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! - TENKASI FOOD FESTIVAL
Published : Oct 20, 2024, 1:05 PM IST
தென்காசி: பாரம்பரிய உணவு வகைகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடையநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏராளமான பாரம்பரிய உணவு வகைகளுடன் கலந்து கொண்டனார்.
உலக உணவு தினத்தை முன்னிட்டு, தென்காசி கடையநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகளான பயறு வகைகள், கொழுக்கட்டைகள், களி வகைகள் மற்றும் பழ வகைகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள், குழந்தைகள் துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், பாரம்பரிய உணவுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
இதுகுறித்து மாணவர் கசிம் இப்ராஹிம் கூறியதாவது, “நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலமாக உடலின் ஆரோக்கியம் குறித்து தெரிந்துகொண்டோம். சுவையாக இருக்கும் துரித உணவுகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.