“அன்னக்கிளி உன்னைத் தேடுது..” பாடியவாறே நாற்று நடும் பெண்கள்! - samba Planting - SAMBA PLANTING
Published : Jul 14, 2024, 3:29 PM IST
திருவாரூர்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகம், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத நிலையிலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் அணை திறக்கவில்லை என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் டீசல் பம்பு செட்டு மூலம் நீர் இறைத்து குறுவை சாகுபடி விவசாயம் செய்யும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பகுதியில் குறுவை நடவுப் பணியில் ஈடுபட்ட பெண் விவசாய தொழிலாளர்கள், வேலை செய்யும் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடல்கள் பாடியபடி நடவுப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த மூதாட்டி ஒருவர், இளையராஜாவின் இசையில் வெளியான 'அன்னக்கிளி' திரைப்படத்திலிருந்து 'அன்னக்கிளி உன்னைத் தேடுது' என்ற பாடலை பாடிய படி நடவு செய்யும் பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கிராமியப் பாடல்களை பாடிய படி நடுவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.